Print this page

 குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் சூட்டுங்கள்! - விடுதலை - 04.05.1963

Rate this item
(0 votes)

 

இந்த ஊருக்கு இன்றுதான் முதன்முதலாக வந்துள்ளேன். மூன்று தினங்களுக்கு முன்புதான் இந்த ஊருக்குத் தேதி கொடுத்தேன் என்றாலும் ஆடம்பரமான வரவேற்பும், உற்சாகத்துடன் பல்லாயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியுள்ளீர்கள். வந்த இடத்தில் ஊராட்சி மன்றத்தார்கள் எனது பொதுத் தொண்டினைப் பாராட்டி வரவேற்புப் பத்திரம் வாசித்து அளித்துப் பெருமைப்படுத்தியதற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஊராட்சி மன்றத்தார்களுக்கு நான் பணிவுடன் எனது கருத்தைத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், ஊராட்சி மன்றம் சாதி ஒழியும் படியாகவும், மக்கள் எல்லோருக்கும் படிப்புக்கு வசதி செய்யும் முறையிலும் நடந்தால் அதுவே போதுமானது. இந்த இரண்டிலும் கருத்து செலுத்துவதுதான் முக்கியம். மற்ற சங்கதிகள் அடுத்தபடி என்றுதான் கூறுவேன்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை நீங்கள் திறந்து வைக் கும்படிப் பணித்துள்ளீர்கள். இது எனக்கு மிக்கப் பிடித்தமான சங்கதி யாகும். டாக்டர் அம்பேத்கர் நாட்டில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கும் வண்ணம் மேல் சாதியார் கொடுமைகளை எல்லாம் எடுத்து விளக்கியவர்.

காந்தியையும், காங்கிரசையும் சாதி ஒழிப்புக்கு இடையூறாக இருப்பது கண்டு கண்டித்துப் பேசியவர் ஆவார். காந்தியார் எந்தவிதத் திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவர் என்று சொல்லிக் கொள்ள அருகதை அற்றவர் என்று கூறியவர். இந்துமதக் கொடுமையைக் கண்டு அதை நம்மால் ஒழிக்க முடியாவிட்டாலும் அந்த மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு 3 இலட்சம் மக்களுடன் புத்த மதத்தில் சேர்வது என்று முடிவு பண்ணிக் கொண்டு சேர்ந்தவர். இன்றுவரை உயிருடன் இருந்து ருந்தால் அவர் இன்னும் பல இலட்சம் மக்களைப் புத்த மார்க்கத்தில் சேரும்படிச் செய்து இருப்பார்.

அவர், தாம் புத்த மதத்துக்கு மாறும் முன்பு என்னையும் அழைத்தார். நான் கூறினேன். "இந்து மதத்தில் இருந்து கொண்டு இந்து மதத்தைக் கண்டித்து அதன் வண்டவாளங்களை எல்லாம் வெளுத்து வாங்கினால் எவனும் எதிர்த்துக் கேட்க முடியாது. மதம் மாறிவிட்டு இந்து மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் உனக்கு என்ன யோக்கியதை உள்ளது” என்று கேட்பார்கள். இந்து மதத்தில் இருந்து கொண்டே கண்டி த்தால் எவரும் எதிர்த்துக் கேட்க முடியாது என்று எடுத்து உரைத்தேன்.

அது கண்டு அவர் கூறினார். “நீங்கள் என்ன, காலம் எல்லாம் பேசிக் கொண்டே இருந்துவிட்டுச் சாவது என்று முடிவுசெய்து கொண் டீர்களா? காரியம் ஏதாவது செய்ய முற்பட வேண்டாமா?” என்று என்னைக் கேட்டார். அதற்கு நான் "என்னமோ அய்யா எனக்கு இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தைத் தாக்குவதுதான் சரி என்று படுகின்றது. தாங்கள் வேண்டுமானால் இப்போது சேருங்கள். நான் என்னாலான அளவு ஆதரவு கொடுக்கின்றேன். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம்” என்று கூறினேன்.

இது பர்மாவில் நடைபெற்ற உலக புத்த மார்க்க மாநாட்டுக்குப் போன இடத்தில் இப்படிப் பேசிக் கொண்டோம். அவர் அங்கேயே புத்த மார்க்கத்தில் சேர்வது என்று முடிவு செய்துகொண்டு கையெழுத்துப் போட்டு விட்டு வந்தார். வந்தபிறகு தாமும் சேர்ந்தது அல்லாமல் பல்லாயிரக் கணக்கான மக்களையும் மதம் மாறச் செய்தவர்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிறந்த கல்விமான். இந்த இந்திய உபகண்டத்திலேயே சிறந்த ஆராய்ச்சிக்காரர். இவர் எழுதிய நூல்களுக்கு உலகெங்கிலும் செல்வாக்கு இருந்து வருகின்றது.

எங்கள் இருவருக்கும் கொள்கையில் பெரும்பான்மையான கருத்து ஒற்றுமையுண்டு. நான் சாதி ஒழிய வேண்டுமானால் அதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரம் இவைகள் ஒழிந்தாக வேண்டுமென்று கூறுகின் றேனோ அதே கருத்தைத்தான் அவரும் கொண்டு இருந்தார். அவரின் லாகூர் சாதி ஒழிப்பு மாநாட்டு தலைமை உரையினைப் பார்த்தால் தெரியும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்டசபை, பார்லிமெண்டு முதலிய வற்றில் 100 - க்கு 16 வேண்டும் என்று கேட்டு வெற்றி பெற்றதோடு நின்று விடாமல் உத்தியோகம், கல்வி போன்றவற்றில் 100 - க்கு 16 வேண்டும் என்று கேட்டு வழிவகை செய்தவர் ஆவார். இவர் யாரும் செய்யாத காரியத் தைச் செய்து வெற்றி பெற்றவர். அவர் புத்த மதத்தில் சேர்ந்ததிலிருந்தே அவரை எப்படியாவது ஒழித்துவிடுவது என்று முடிவுசெய்து விட்டார் கள். எப்படியோ சதி செய்து அவரைக் கொலை செய்து விட்டார்கள். அவர் சாவு இயற்கை அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் வைத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

- விடுதலை - 04.05.1963

 
Read 63 times